சின்ன அன்னையே திரேசம்மா - நீ
செல்வ(து) எங்கு? சொல், திரேசம்மா..
உன்னைக் கண்டதும் நெஞ்செல்லாம் - புது
உவகை பொங்குதே திரேசம்மா..
கச்சை மீதினில் ஜெபமாலை - வைத்த
காரணம் என்ன திரேசம்மா?
இச்சனங்கள் படும் வேதனையை - எண்ணி
இறையை வேண்டவோ, திரேசம்மா?..
தேர்தல் நாடகம் தொடங்கியதே - அது
தெரியுமா, சின்ன திரேசம்மா?
ஊர்கள்தோறும் பொய் வாக்குறுதி -பல
உலாப் போகுதே, திரேசம்மா!..
மாறி மாறி வசை பாடுகின்றார் - இந்த
மக்கள் யார் பக்ககம் ஓடுகின்றார்?.
தேறியவர் யாரும் இல்லையம்மா - இதை
சிலுவை இயேசுவிடம் சொல்லிடம்மா!..
ஏழை பாழைகள் இவரம்மா - இங்கு
எந்தக் கட்சிதான் சரியம்மா?
கூழைக் கும்பிடுகள் போடுகின்ற - தமிழ்க்
கோழைகளுக்(கு) என்று முடிவம்மா?..
சென்று வா சின்ன திரேசம்மா - ஒரு
சின்ன புன்னகையை வீசம்மா..
நன்று நடக்கட்டும் தேர்தலம்மா - அது
நாட்டு மக்கள்தம் ஆவலம்மா!!..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக