உயிர்ப்பு விழாக் கவிதை. """"""""""""""""""""""""""
தேவ மைந்தன் உயிர்த்தார் எனுஞ் செய்தி
செவியில் தேனாகப் பாய்கிறது..
பாவமும் சாவும் வெல்வதில்லை யெனும்
பதிவை வரலாறு காண்கிறது..
சிலுவை அவமானம் தன்னை எதிர்கொண்ட
தியாகத் திருமகனின் உயிர்ப்பு விழா..
அழுகையை மகிழ்ச்சிப் பாடலாய்க் கேட்கும்
அவனியோர்க்கு ஆர்ப்பரிப்பு விழா..
அலகை வெருண்டோட, அவலம் மிரண்டோட
அரசன் முடிசூடும் ஆட்சி விழா..
உலகின் எல்லைகளை ஆளும் மாமன்னன்
உலாப் போகும் திருக்காட்சி விழா..
"மூச்சடங்கிவிடும்! " என்னும் மூப்பர் சதி
முற்றிலும் பொய்த்து முடிந்த விழா..
பேச்சிலாது படைக் காவல் பரிவாரம்
பீதியுற வீழ்ந்து மடிந்த விழா..
நேற்றுக் கண்முன் நிகழ்ந்ததனை எண்ணி
நெஞ்சு பொறுக்காமல் நொந்ததன்றோ?..
"தோற்றுவிடவில்லை நீதி!" என இன்று
சுதனின் உயிர்த்தெழுதல் சொன்னதன்றோ?..
"கழுவில் ஏற்றுங்கள்!" என்று தீர்ப்பிட்ட
கயவர் கனவு நிறைவேறியதா?..
"எழுந்து வருகிறேன், எண்ணி முந்நாளில்!"
என்ற சுதன் வாக்கு தவறியதா?..
மரணம் முன்வந்து மண்டியிடும் காட்சி
மண்ணில் யாம் எங்கும் கண்டதில்லை..
கருணையொடு தியாகம் கலந்த பேரன்புக்
கடவுளை மரணம் வென்றதில்லை..
ஒளியை உலகுக்குக் கொண்டு வந்தவரின்
உடைமை தியாகமெனும் அர்ப்பணம்தான்..
எளிய நெஞ்சும், உயிர்ப் பரிவும், மன்னிப்பும்
இறப்பை வீழ்த்திவிடும் ஆயுதம்தான்..
புதிய வரலாறு படைத்த பெருமானின்
புனித பொற்பாதம் போற்றுமினோ!..
விதியைப் புறங்கண்ட வீரத் திருச்சுடர்தம்
விடுதலைப் பெருமை சாற்றுமினோ!..
இன்னுயிர் ஈந்த ஏசு நண்பனுடன்
எவரை இணையாகக் காட்டுவது?..
இன்றோடு சாவை வென்ற பேரழகை
எந்த நூலில் நான் தீட்டுவது?..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக