Tamil

சனி, 16 ஜூலை, 2016

மறுபடியும் அறைகிலோம்!!

புனித வெள்ளிச் சிந்தனைகள்... 
-----------------------------------------------------


குறுக்கு மரமென்னும் கொடிய சிலுவைதனில்
         குற்றவாளிதான் தொங்குவான்..
வெறுக்க வைக்குமொரு வேதனைச் சாவை
        விழி பிதுங்க அவன் தாங்குவான்..

ஆண்டு (இ)ரண்டாயிரத்தின் முன்னர் ஓர்
       அண்ணல் தொங்கினார் சிலுவையில்..
வேண்டுமா அந்த வேதனைச் சாவு
       விண்ணவன் மைந்தன் மேனியில்?..

சிலுவையில் தொங்கும் திருமகன், மாசு
       சிறிதுமற்ற நம் ஆண்டவன்..
கொலுவிருந்து கோலோச்ச வேண்டிய நம்
       கொற்றவன், குற்றமற்றவன்..

"யூதனுக்கு நீ அரசனோ? " என்று
       யுக முதல்வனிடம் கேள்வியா?..
பாதகர்க்குப் பரிகாசப் பொருளாகப்
       பரம்பொருள் நிற்றல் நீதியா?..

பாடனைத்தும் கணப் போழ்திலே மாற்றப்
       பரமனுக்(கு) ஆற்றல் இல்லையா?..
"மூட மானிடா, தள்ளி நில்!" என்று
       மொழிவதென்ன, முடியாததா?..

உலக மாந்தர்க்குப் புதிய நற்செய்தி
       உரைத்தவன் ஏசு அல்லவா?..
குலைநடுங்கும் ஒரு தண்டனைத் தீர்ப்பு
       கொடுமையின் உச்சம் அல்லவா?.. 


ஐயகோ! அந்தத் துய்யவன் மேனி
       ஆயிரம் காயம் கண்டதேன்?
பொய்யர்தம் கையில் போதனைத் தெய்வம்
       புண்களால் வெந்து நொந்ததேன்?..

ஒற்றைச் சொல்லிலே உலகை ஆக்கியோன்
       உடலம் எங்கணும் குருதியோ?..
வெற்றி மகுடமே சூடும் தலைமீதில்
       விஷம் நிறைந்த முட்கிரீடமோ?..

முட்கிரீடமாய் நின்று குத்துவது
       முற்றும் நமது வன்செயல்களே..
வெட்கமின்றி நாம் புரியும் தீங்கெலாம்
       வேந்தனைக் குத்தும் முள்களே..

என்ன சொல்வதோ, ஏசு மன்னவா!
       இன்னும் யாம் தீங்கு செய்கிலோம்..
மன்னித்தருளுவாய்: சிலுவை மீதினில்
       மறுபடியும் உன்னை அறைகிலோம்!..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக