
அசையாமல் அமர்ந்திருக்கும் ஆழிவெண்சங்கே - உன்னை
ஆர் இங்கு அனுப்பி வைத்தார் ஆழிவெண்சங்கே?..
திசைமாறி வந்தனையோ ஆழிவெண்சங்கே? - உனக்குச்
சேதியொன்று சொல்ல வேண்டும் ஆழிவெண்சங்கே!..
கடலுக்குள் நடப்பதென்ன ஆழிவெண்சங்கே? - எங்கள்
கணணீரை யாரறிவார் ஆழிவெண்சங்கே?..
திடல்விட்டுத் திரைக்குள்ளே சென்றுவா சங்கே - எங்கள்
செந்தமிழ் மீனவர் துயரம் கண்டுவா சங்கே!..
மீன்பிடிக்கச் செல்லுகின்றோம் ஆழிவெண்சங்கே - எம்மை
மிருகங்கள் மேய்வது ஏன், ஆழிவெண்சங்கே?..
ஊன்பசிகொண்(டு) அலைகின்ற ஓநாய்க் கூட்டம் - செய்யும்
உபத்திரவம் ஒழிவ(து) என்றோ ஆழிவெண்சங்கே?..
வலையறுத்து மீனெல்லாம் கடல்தனில் வீசிச் - சுற்றி
வளைத்து சிறைப்படுத்துதல்தான்நடக்குது சங்கே!
அலைகடலின் அடல்மறவர்அடிமைகள் என்றே - எங்கள்
அரசாங்கம் நினைக்கிறதா ஆழிவெண்சங்கே?..
கடிதத்தை எழுதுகின்ற கடமையில் மட்டும் - இங்குக்
கடுகளவும் குறைவில்லை ஆழிவெண்சங்கே..
துடிதுடிக்கும் மீனவர்க்கோ ஒவ்வொரு நாளும் - கடலில்
தொடருவது சோகமன்றோ ஆழிவெண்சங்கே?.
படகுகளை இழந்து நிற்கும் பரதவனிங்கே - வெறும்
பாய் கொண்டா மீன்பிடிப்பான்ஆழிவெண்சங்கே?..
அடம்பிடித்துத் தர மறுக்கும் சிங்களத்தானுக்(கு) - இந்த
அரசாங்கம் அஞ்சுவதேன் ஆழிவெண்சங்கே?..
வெண்ணுரையைத் தழுவி உடன் விரைந்திடு சங்கே - நீந்தி
வெட்டுக்கும் விலங்காலே சென்றிடு சங்கே..
கண்ணெதிரே சிங்களனைக் கணடிடு சங்கே - அந்தக்
காடையன் மூஞ்சியில் காறி உமிழ்ந்திடு சங்கே!!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக