Tamil

சனி, 16 ஜூலை, 2016

இன்று போய் நாளை வாரும்!


பேசாமல் போங்கள் அணில் பிள்ளையாரே - இங்குப்
பிரச்சினை பண்ணாதீர் அணில் பிள்ளையாரே... 
கூசாமல் என்னுடைய இடத்தில் வந்து - சோற்றைக்
கொள்ளையிடாதீரும் அணில் பிள்ளையாரே..

சீதை மணாளனை உமக்குத் தெரியும் அன்றோ? - அவர்க்குச்
செல்லப் பிள்ளை நீரென்ப(து) அறிவீர் அன்றோ?..
பாதை மாறி இங்கு வந்து என் சாப்பாட்டைத் - தட்டிப்
பறிப்பது சரியில்லை அணில் பிள்ளையாரே...

பாலமிட்ட இராமருக்குக் கல் அளித்து - ஈழம்
பார்ப்பதற்கு வழி வகுத்த வள்ளலார் நீர்..
ஏழை இந்த இளங்கிளியின் பசி தீர்க்காமல் - இங்கும்
என் வயிற்றில் கல் இடவா வந்துள்ளீர் நீர்?..

மரக்கிளையில் பழம் தொங்கும் காட்சி பாரும் - அதை
மனதாரச் சாப்பிட்டு உம் ஆசை தீரும்..
இரக்கமிருந்தால் உடன் இவ்விடத்தை நீங்கும் - வேண்டின்
இன்று போய் பொழுதிருந்தால் நாளை வாரும்!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக