Tamil

திங்கள், 3 அக்டோபர், 2016

"வண்ணாத்திப் பூச்சி"

வண்ணத்துப் பூச்சியே! - உன் பெயர் 
'வண்ணாத்திப் பூச்சி'யா? 
பெண்ணாட்டி பெயரிலே - உனக்கொரு
பிரியம் வந்துற்றதா?..
"பட்டர் ஃப்ளை" என்றுதான் - பெண் பெயர்
பாட்டிலும் எழுதினான்..
இட்டுக்கொள் பேருதான் - நீயும் ஓர்
இனிய 'வண்ணாத்தி'தான்!..
மலர்த் தோட்டம் எங்கணும் - நீ தரும்
மகரந்தப் பகிர்வினில்..
பலவண்ண மேனியில் - சிறகொடு
பறப்பதேன் தொலைவினில்?..
தேனுண்ட காமமோ? - நான் உனைச்
சிறைப்பிடித்தல் சிரமமோ?
வான் உலவும் கர்வமோ? - உன்னையென்
வலைப்படுத்தல் கடினமோ?..
உறைவிடம் சொல்லுவாய் - எனக்கொரு
உதவி நீ செய்குவாய்..
நறுந் தேனைக் கொண்டு போய்ச் - செலவிடும்
நாகரிகம் நவிலுவாய்!..
தேன் தூங்கும் பூவுடன் - தினம்தொறும்
'தேன் நிலவு'க் கூடலா?..
காண்கின்ற மலரெலாம் - முயங்கிடல்
கற்பின்மை அல்லவா?..
கற்பின்மை என்பினும் - உன்செயல்
கருணைக்(கு) உகந்ததே..
தப்பின்மை காண்கிறேன் - கொங்கினைத்
தருமம் நீ செய்வதால்!..
எண்ணற்ற மலர்களை - நீதான்
இனப் பெருக்கம் செய்கிறாய்..
கண்ணுறு மலர்க்கெலாம் - நீதான்
கருவறைகள் தருகிறாய்!..
சூற்பைகள் காய்களாய் - பொழில்தனில்
தொடர்ந்(து) அவை விதைகளாய்..
பார்ப்போர்க்கு மரங்களாய் - நிலமிசைப்
பசுமை உன் பணிகளாய்..
எந்நாளும் மலர்களைத் - தழுவியே
இயற்கையைக் கழுவிடும்
வண்ணத்துப் பூச்சியே! - நீயொரு
"வண்ணாத்திப் பூச்சி"யே!..
*******

வியாழன், 15 செப்டம்பர், 2016

ஓணம்.. பொன்னோணம்!..


மண்ணகத் தேமா வேலி
     மன்னவன் வருவான் என்னும் 
எண்ணமோ(டு) ஒவ்வோர் ஆண்டும்
     இனியகே ரளத்தின் மாந்தர்
பொன்ஓணம் விழாக்கொண் டாடிப்
     பூரித்(து)இ ருக்கும் இந்நாள்
கண்ணினுக்(கு) இனிய காட்சி:
     களிப்பொடு வாழ்த்துச் சொல்வோம்!..

முன்றிலில் அத்தக் கோலம்:
     முரசுகள் முழங்கும் மேளம்:
தென்றலில் ஆடும் ஓணத்
     தீஞ்சுவைப் பாட்டுத் தாளம்:
நன்றுடன் வரிசை கட்டி
     நடமிடும் மலையா ளத்துப்
பெண்டிர்தம் தம்பு ராட்டிப்
     பேரழ(கு) ஒளிரும் ஓணம்!..

ஊஞ்சலில் ஆடு கின்றார்
     உற்சவத் தேவ தைமார்..
தேன்சுவை விருந்து வைத்துச்
     சேச்சிமார் அசத்து கின்றார்..
"யாம்சளைத் தவர்அல் லோம்!"என்(று)
     யாங்கணும் பொருள்சென்(று) ஈட்டும்
நாஞ்சில்நன் னாட்டா ருக்கும்
     நல்லபொன் ஓணம் இன்று!..

பொன்னுகே ரளத்தி லுள்ள
     புண்யகோ டிகள்க்(கு)இந்(நு) என்டே
சின்னதோர் அபேட்ச யுண்டு:
     சிறுவாணி யினைச்செ றுத்து
பின்னொரு அணகட் டண்டா:
     பிரஸ்னமொந்(நு) உண்டாக் கண்டா:
அன்(னி)யன்டே கூட்டு நிங்ஙள்
     அவசரப் பெடலும் வேண்டா!..

உலகெலாம் மலையா ளத்தார்
     ஓணநாள் கண்ட போதும்,
பலகாலம் தமிழ்நாட் டாரும்
     பழகிவந் துள்ளார் ஓணம்:
நலமுடன் நாமும் சொல்வோம்
     நண்பினர்க்(கு) ஓணம் வாழ்த்து!
வளமுடன் நீடு வாழ்க,
     வள்ளங்க ளியின்பொன் ஓணம்!..

*******

பேரச் செல்வங்கள் நடுவில்..

 
ஈரிருபத் தாண்டின் முன்னர் 
     என்னுடனே பயின்ற நண்பர்:
பேரிறைவன் அருளால் ஆயர்
     பெருந்தகையென்(று) ஆன பின்னர்,
சீரிளமை யோ(டு)என் பேரச்
     செல்வங்கள் நடுவில் தோன்ற..
ஆரினும்நான் பேறு பெற்றேன்
     அரியபடம் இதனைக் காண!.. 

ஈடிலாத் தியாகம்!..


பீடியைச் சுற்றும் எங்கள் 
     பெண்டிர்காள்! உங்கள் தியாகம் 
ஈடிலா த(து)எனும் உண்மை 
     எவர்அறி கின்றார்? நீவிர்
நாடி,ந ரம்பைத் தேய்த்து
     நாளெலாம் கண்ணீர் சிந்தி
ஓடிஉ ழைத்தா லன்றோ
     ஊரில்ஓர் பட்ட தாரி?... 

எங்கள் கரைமடிக் கம்பால்!..


தென்குமரிப் பள்ளம் ஊரில் 
          திரையலையின் வெள்ளத் தேரில்
பொங்கிவரும் மீன்பி டிக்கப்
          பூட்டிய கம்பால் - தென்னைத்
தங்கநிறச் சவுரி பெய்து,
          தக்கபடி முறுக்கி, எம்மோர்
செங்கரங்கள் இழுப்ப தற்குத்
          தீட்டிய கம்பால்!..

நீலநிறக் கடல்வி ளிம்பை
          நிலக்கரையோ(டு) இணைத்துக் கட்டிப்
பாலமெனப் பயன்வி ளைக்கும்
          பண்டைய கம்பால் - கரையின்
சேலளந்த கெட்டிக் காரர்
          சீரளந்த வரிசை கட்டி,
நாலடிநா டோடிப் பாடல்
          நடத்திய கம்பால்!.

கட்டுமரம் கடலில் காண,
          கயிறுவடம் தரையில் காண,
தட்டுமடி வளப்பு காணும்
          கரமடிக் கம்பால் - வெண்மைப்
பட்டுமணல் விரிப்பில் நின்று
          பாட்டுமணம் பரப்பும் ஆழிச்
செட்டிகுலம் சேர்ந்(து)இ ழுக்கும்
          சித்திரக் கம்பால்!..

வெட்டுகடல் வெலங்கே வெள்ளி
          வெட்டமிடும் வேளா மீனைக்
கட்டுதற்(கு)எம் ஆ(ண்)வீ ரன்மார்
          காட்டிய கம்பால் - மேளம்
கொட்டுகிற குருகும் கொக்கும்
          கூட்டமொடு குலவை யிட்டுக்
கொட்டமடிப் பதனைக் காணக்
          கூட்டிய கம்பால்!..

வட்டமுறச் சுழற்றிப் போட்டு
          வலியவடத் தலக்கைக் காரன்
எட்டநின்று மீனைக் காணற்(கு)
          இணங்கிய கம்பால் - ஈரம்
பட்டவுடல் தளர்ந்தி டாமல்
          பழக்கமுடன் இழுக்கும் காட்சி
கிட்டநின்று பார்த்துப் பார்த்துக்
          கிறங்கிய கம்பால்!..

வெண்ணுரையின் திடலைத் தேடி
          விரைந்துமடிக் குள்ளே மீன்கள்
பண்ணுகிற விளையாட் டெல்லாம்
          பார்த்திடும் கம்பால் - நெய்தல்
மன்னவர்தம் மீன்பா டெல்லாம்
          மண்ணுலகில் காணக் காண
மகிழ்ச்சியென மனதால் எம்மை
          வாழ்த்திடும் கம்பால்!..

முக்குவர்தம் ஒற்று மைக்கும்
          முதியதமிழ்ப் பண்பாட் டிற்கும்
பக்குவமாய்ச் சான்று கூறும்
          பரம்பரைக் கம்பால் - இந்தத்
தெக்குதிசை மக்கள் மீது
          திணித்துவிடும் சதியை வீழ்த்தும்
சின்னமெனத் திகழும் எங்கள்
          சிந்தனைக் கம்பால்!..

துறைமுகத்தைத் திணிக்கப் பார்க்கும்
          சொந்தபுத்தி இல்லா தாரின்
கறைமுகத்தைக் கண்டு பொங்கும்
          கரமடிக் கம்பால் - தீயோன்
மறைமுகமாய் எதுசெய் தாலும்
          மடிக்குள்ளே வீழ்த்தி, மாற்றான்
அரைமுகத்தை அறிய வைக்கும்
          அதிரடிக் கம்பால்!.. 

பொன்னார் புறப்பட்டுள்ளார்!..


ஒய்யார நன்னடையும், அடுக்க டுக்காய்
         உச்சியின்மேல் பன்னிரண்டு கலமும் தாங்கி.. 
மெய்யார வேர்த்தபடி நடந்து செல்லும்
         மெல்லிடையீர்! ஒருநிமிடம் நில்மின்! நீவிர்
கையாரப் பிடிக்காமல் கலங்கள் வீழாக்
         கலையறிந்த தாயெண்ணிக் கர்வம் கொள்ளேல்:
பொய்யாரப் பலகலன்கள் பூட்டிக் காட்டும்
'        பொன்னார்'என் றொருவர்இதோ புறப்பட் டுள்ளார்!.. 

கண்டதுண்டா?..


உருண்(டு)உருண்டு உறுமிவரும் கடல்விளிம்பில் - எங்கள்
உடைமைகளின் திருப்பயணம் தொடங்குது,பார்:
பறந்துசெல்லக் காத்திருக்கும் படகினைத்தான் - அலைகள்
பாய்ந்துவந்து சித்ரவதைப் படுத்துது,பார்!..

கடல்நெடுகே பெரும்பயணம் செல்வதற்கும் - எந்தக்
காற்றினுக்கும் பதில்கூறிப் பாய்வதற்கும்,
உடன்இருக்கும் அடல்மறவர் உழைப்பதற்கும் - என்றும்
உற்றதொரு வாகனமாம் படகினைப்பார்!..

நீரோட்டம் கண்டுவலை இளக்குதற்கும் - சுற்றி
நீவாடு பார்த்துமடி வளைப்பதற்கும்,
யாரோடும் எப்போதும் அருகிருக்கும் - எங்கள்
யாத்தினத்துக் காவலனின் நிலைமையைப்பார்!..

எங்கெல்லாம் கடல்ஆழம் உள்ளதென்றும் - நாங்கள்
எவ்விடத்தில் மீன்வேட்டம் புரிவதென்றும்,
எங்களுக்குத் தெரிவிக்கும் நண்பனுக்கே - அலைகள்
இடர்செய்து தடுக்கின்ற காட்சியைப்பார்!..

தடுத்திடினும் தலைகீழாய் நிறுத்திடினும் - நாங்கள்
தள்ளுகின்ற யாத்தினங்கள் தடைபடினும்,
அடுத்தடுத்து மீனவர்கள் முயல்வதைப்பார் - மிடல்சால்
அடல்மறவர் கடற்பரப்பில் நுழைவதைப்பார்!..

கடற்பரப்பில் எம்மவர்கள் நுழைந்துவிட்டால் - வீரக்
கவசமென விளங்குவ(து)இப் படகுதானே?
இடம்வலம்எல் லாம்அறிந்து கொள்ளுதற்கும் - கடலில்
ஏற்றதொரு கருவியும்இப் படகுதானே?..

ஆழிபடு திரவியங்கள் அத்தனையும் - நெய்தல்
அரையர்களை அல்லா(து)இங்(கு) ஆரறிவார்?
நாழிதொறும் படகினையே பயன்படுத்திப் - பெற்ற
ஞானமிந்த ஞாலமதில் யார்பெறுவார்?..

துறைமுகத்தைக் கொண்டுவரத் துடிப்பவனே - நீஓர்
துளியேனும் எம்கருத்தைக் கேட்டதுண்டா?
கரையோரம் கடல்யுத்தம் நடத்துகையில் - நாங்கள்
கண்டதுண்டம் ஆவதனைக் கண்டதுண்டா?.. 

குறளோன் மீது இருள்!..


ஆகஸ்டு பதினைந் தாம்நாள்.. 
       ஆறேமுக் கால்ம ணிக்கு.. 
வேகமாய்க் கதிரோன் மேற்கில்
    வீழ்ந்தபின்.. விவேகா னந்திற்(கு)
ஏகமாய் ஒளிவெள் ளத்தை
        இறைத்தவர், முப்பா லின்கார்
மேகமாம் குறளோன் மீது
      மிச்சமாய் இருள்தான் வைத்தார்!.. 

உழுதுண்டு வாழ்வார்!..


ஒற்றைமகன் தன்பின்னே நடந்து வந்தான்:
          உழவுபற்றித் தந்தையிடம் பாடம் கேட்டான்:
"கற்றதொழில் நாட்டுக்கே அன்னம் வார்க்கும் 
           கலையப்பா! மறவாதே, மகனே!" என்றான்:
பெற்றெடுத்த பிள்ளையிடம் விவசா யத்தின்
        பெருமைதனை விதைத்துவிடும் தகப்பன் மாருக்(கு)
உற்றநன்றி நாளையந்தப் புதல்வர் செய்வார்:
           உழுதுண்டு வாழ்வாரே உலகை ஆள்வார்!.. 

கும்பாரிக் கல்!..


தென்தமிழ் மேற்குத் திரைகடல் ஓரத்தில் 
கண்கவர் தோற்றத்தில் காட்சிதரும் - குன்றுகளில்
ஒற்றைப் பெருங்கல்லாய் உட்கார்ந்(து) இருக்கும் 
கற்றூணாம் கும்பாரிக் கல்.

உச்சிவரை எப்படியோ ஊர்ந்த நினைவுகளை..
கச்சிதமாய்ப் பட்ட(ம்)விட்ட காலத்தை - அச்சமின்றி
நண்பரொடு நின்று நடுவானம் நோக்கியதைக்
கொண்டுவரும் கும்பாரிக் கல்.

சறுகியதும், என்றன் சகநணபர் அப்போ(து)
அருகிருந்து காத்த அறமும் - மறுபடியும் 

கூட்டத்தோ(டு) ஏறிக் கொடியசைத்த பேரழகும்
காட்டிநிற்கும் கும்பாரிக் கல்.

கச்சான் அடித்தாலும் உப்புக் கரித்தாலும்
மச்சான் மடிதள்ளச் சொன்னாலும் - உச்சி
பிடித்துப்போய் வீணாய்ப் பிடிவாதம் செய்த
கடிகையூர்க் கும்பாரிக் கல்.

தெக்குகடல் ஓசையிட, தேன்தமிழின் பாட்டறிந்த
முக்குவர்தம் பாடல் முழக்கமிட - மக்கள்
முடியுமட்டும் கேட்கவைத்த முந்தையர் நெய்தல்
கடிகைநகர் கும்பாரிக் கல்.

நாலைந்து கல்லோடு நல்லுறவாய் நணபனைப்
போலமர்ந்த தோற்றப் பொலிவுகண்டு - சேலளந்த
ஊரவரும் 'கும்பாரிக் கல்'லென்(று) ஒருபெயரைக்
கூறவரும் கொள்ளையெழில் கல்!.. 

கடல் மேலே திடல்!..


கடல்மேலே செலுத்தவொரு கப்பல் செய்தான்.. 
      கப்பலின்மேற் பரப்பினிலே செயற்கை யாய்ஓர்
திடலமைத்தான்: திடலெங்கும் பயிர்வ ளர்த்துச்
   செவ்வியதோர் புல்வெளியைப் படைத்து விட்டான்..
இடம்கிடைக்க வில்லையெனும் கார ணத்தால்
     இனயத்தில் துறைமுகத்தை நிறுவப் பார்க்கும்

மடக்குடிகாள், ஜப்பான்கா ரன்போல் உங்கள்
  மண்டைவேலை செய்யாத மர்மம் என்னே!.. 

கடல்வெளி நெடுகே..

கடல்வெளி நெடுகே.. 
"""""""""""""""""""""""""""""""""

ஆழிநீர்ப் பரப்பின் மீதில்
        ஆயிரம் காத தூரம்
ஊழியின் காற்று போலே
       ஒற்றுமைப் பயணம் மேற்கொண்(டு)
ஏழிசைப் பண்கேட் டற்கும்
       இளைப்பாறிச் செல்வ தற்கும்
தோழிமா ருடன்வந் துள்ள
       சுதந்திரப் புள்ளின் சுற்றம்!..

*****

ஒற்றை மலரே, நிமிர்ந்து பார்!..


(ஆசிரியப்பா)

ஒற்றை மலரே, ஒற்றை மலரே, 
சுற்றிய புல்நுனி பற்றிய பனித்துகள்
முற்றிலும் நோக்கிடும் ஒற்றை மலரே!..

சற்றொரு தருணத் தேனும் நினதுசெந்
நெற்றிமீ தமர்ந்தொரு நித்தில தரிசனம்
உற்றிலா தென்னென உருகிடப் போந்தனை
நற்றிறம் கற்றிலா ஒற்றை மலரே!..

ஒவ்வொரு நுனிப்புல் பனித்துளி உமிழ்ஒளி
செவ்விய ஞாயிறின் சிதறல் என்பதை
எவ்விதம் மறந்தனை, என்னரும் மலரே?..

கவிழ்ந்தது போதும்: கண்விழி, மலரே!..
நிமிர்ந்துபார்: முகிலிடை நிற்பவன் கதிரே!..
அறிந்தனை கொல்?சொல், மலரே:
ஆர்தான் பனித்துளிக்(கு) அருளியோன் என்றே!..

******

ஆறுகளே!.. நாட்டின் பேறுகளே!..


ஆறுகளே! நாட்டுக்(கு) அணிகலனாய் வாய்த்திருக்கும்
பேறுகளே! உம்மால் பெருந்துயரே - வீறுகொளாக்
கோழைத் தமிழோர் குறைபா(டு) அறியாதே
நீள நடக்கின்றீர் 'நீர்'!..

நன்னடத்தைக் கன்னியாம் நற்றமிழர்க் காவிரியைக்
கன்னடத்தார் கைப்படுத்திக் காட்டுகின்றார்: - இந்நடத்தை
ஏற்புடைத்தோ? என்(று)எழும்பும் எம்மோர் குமுறலெல்லாம்
கேட்பதுண்டோ உங்கள் செவிக்கு?..

பாலாற்றை எம்கண்முன் பாழ்ஆறாய் ஓடவைக்க
ஆலாய்ப் பறக்கின்றார் ஆந்திரத்தார் - நூலாய்
இளைக்கும் உழவர்தமை ஏறெடுத்தும் பாராப்
பழிக்(கு)இங்கே என்ன பதில்?..

நீலகிரி ஈன்றெடுத்த நீர்மழலை, எம்நிலத்துள்
சீலமுடன் ஓடும் சிறுவாணிக்(கு) - ஊழல்மிகு
கேரளத்தான் கூடச் செறுப்(பு)அணையைக் கட்டுதற்(கு)
ஆரளித்தார், அஞ்சாத் திமிர்?..

மழைநீர் பெருகின் மதகுதிறக் கின்றார்..
பிழைவானம் பொய்க்குங்கால் பேணார் - விளைநிலமோ
வெட்டவெளி ஆனபின்பும் வெள்ளம்தா ரார்:நீவிர்
உற்றபுகழ்க்(கு) உண்டோ பொருள்?..

நதிநீர்ப்பங் கீட்டு நடுவர்மன்றம் இன்(று)ஓர்
பொதிசுமக்கும் நல்விலங்காய்ப் போயிற்(று): - எதுசொலினும்
கேட்காது: தீர்ப்பும் கிடைக்கா(து): உரிமைகளை
மீட்கவழி வேறுண்டோ, மேல்?..

எம்மவர்க்(கு) எட்டும்நீர் எட்டா(து) இடைமறித்து,
தம்மவர் போக்கில் தடுப்பணைகள் - வன்முறையாய்க்
கட்டுகின்றார் ஆந்திரரும் கர்நா டகத்தாரும்:
கெட்டவரை யார்கேட் பது?..

முலைசுரந்து பால்வார்க்கும் முன்னறிதெய் வம்போல்
அலைசொரிந்(து) எம்கூழ் அளக்கும் - விலைகடந்த
ஆறுகளே! நீவிர் அறமற்றுப் போவீரேல்
ஆறுதலாய் எம்மவர்க்(கு)இங்(கு) ஆர்?..

*******

கொல்லாத "கொல்லா"ம் பழம்!..


பச்சிலைகள் சூழ, பலபூக்கள் ஆங்காங்கே 
மெச்சிநின்ற வாறேதம் மெய்சிலிர்க்க - எச்சில்தனை
ஊறவைத்து, கொய்தற்(கு) உடனே எனைமரத்தில்
ஏறவைத்த தோட்டம் இது.

தித்திக்கும் செங்கனிகள் தீயின் பிழம்புகளாய்
எத்திக்கும் தொங்கும் எழிழ்கண்(டு)என் - புத்திக்குள்
போதைப் படலம் புகுத்தியது, நான்செல்லும்
பாதைநின்ற கொல்லா மரம்.

தென்னைமரத்(து) ஈர்க்கில் செருகியகொல் லாம்பழத்தை
முன்னையெம் பள்ளம் முதுவூரில் - பொன்நிகர்மீன்
கொண்டு,பண்ட மாற்றுக் கொடுத்த நினைவுகளைக்
கொண்டுவரும் கொல்லாம் பழம்.

உப்பை உறிஞ்சிக் கடல்நீரை உள்வாங்கி,
நட்புபகிர்ந் தாற்போல் நனைந்துபட்டு - செப்பமுடன்
ஆழிமணல் மேட்டில் அமர்ந்துண்ட என்நினைவின்
நாழிசொல்லும் நல்ல பழம்.

நள்ளிரவில் நண்பனுடன் நாடான் விளைபுகுந்து
கள்ளமிட்(டு) உண்ட கனிபோக - கொல்லண்டி
சேர்த்தெடுத்(து) ஓடித் தெருமுனைக்கு வந்ததெலாம்
கோர்த்துதரும் கொல்லாம் பழம்.

பச்சைக்கொல் லண்டிப் பருப்பினைப் பால்களையா(து)
இச்சையுடன் தின்ன, இதழ்முழுதும் - நச்சினைப்போல்
பொள்ளிப் படர்ந்திருந்த புண்ணின் நினைவெல்லாம்
சொல்லுகின்ற கொல்லாம் பழம்.

மண்ணில் புதைத்து மறுநாள் அதைஎடுத்து
கண்ணில் படாதவாறு கள்ளருந்தி - எண்ணில்லாச்
சேட்டை புரிந்த சிறுவயது நாள்களைமுன்
காட்டியது இந்தக் கனி.

ஊரவர்க்கும் உற்றார் உறவினர்க்கும் தேனார்ந்த
சா(று)உவக்கும் நாஞ்சில் சரித்திரம் - வேறெவர்க்கும்
இல்லாத இன்பமெலாம் ஈந்(து),என் நினைவுகளைக்
கொல்லாத "கொல்லா"ம் பழம்!.. 

ஆளுயர மீனே, மீனே..


தோளுயரம் தனையும் தாண்டித்
         தொங்கிநிற்கும் தலைகீழ் மீனே.. 
வாளுயர்த்தி உன்னை வீழ்த்தும் 
       வலுவிருந்தும், வலையில் மாட்டும்
கோளுடையார் எங்கள் நெய்தல்
        குலத்தவர்என்(று) அறிந்து கொள்வாய்:
ஆளுயர மீனே, நாஞ்சில்
          அரையர்கள்தாம் படுத்த மீனே!.. 


திங்கள், 25 ஜூலை, 2016

தொளவை துணையுண்டு!


கட்டு மரம்மீது மீனவன் - அலை
கடலில் தனியொருவன் தானவன்.. 
வெட்டு கடல்வந்து விரட்டினும் - அதன்
விளிம்பை எதிர்கொள்ளுவான் அவன்!..


ஒத்தனா மரத்துக்காரனாம் - கையில்
ஒரு தொளவை மட்டும் தோழனாம்..
அத்தனைக் கடற்பரப்பிலும் - அதை
ஆயுதமாக்கிடும் வீரனாம்!..

கடலின்மீது அவன் செல்லுவான் - அங்குக்
கலங்கிடாது தொழில் செய்குவான்..
உடலில் வீசிடும் உப்பு நீர் - கண்டு
ஒருநிமிடமேனும் ஓய்ந்திடான்!..

உருண்டு திரள்கின்ற அலைகளே - இந்த
ஒத்தனா மரத்தை மூடுவீர்..
மருண்டு போகான் அம்மீனவன் - நீர்தான்
மறுபடியும் விலங்கே ஓடுவீர்!..

படுத்த மீனையும் வலையையும் - இன்று
பாய்ந்து பிடுங்கவா பார்க்கிறீர்?
தொடுத்து வெல்லுவான் மீனவன் - அந்தத்
தொளவை துணையுண்டு, காணுவீர்!..
×××

புதன், 20 ஜூலை, 2016

வந்திடு, வள்ளுவனே!

விடுதலை நாளிதழில்(23-07-2016) வெளிவந்தது. பார்க்க :
http://viduthalai.in/page5/126485.html

(கட்டளைக் கலித்துறை)


காலம் கடந்த கவிப்புல மாகக் கனிந்தவனை..
ஞாலம் உணர்ந்து நயந்த நெறிகளின் ஞாயிறினை..
ஆலம் விழுதினும் ஆயிரம் மேலெனும் ஆளுமையை..
சாலப் பழித்த சதியைஎவ் வாறு சகிப்பதுவே!.. 


நாடுகள் தாண்டிய நாயனார் வள்ளுவன், நாமறிவோம்..
ஏடுகள் போற்றும் எழுத்தர சன்புகழ் இன்றறிவோம்..
காடு களிலுள்ள கல்லின் மனத்தவர் காண்பதுண்டோ
பாடு புகழ்தமிழ்ப் பாவலன் வள்ளுவன் பற்றியதே?..

காவிப் பயல்களும் கண்ட நரிகளும் சாதிவெறிப்
பாவிக ளும்கூடிப் பாவலர் வேளைப் பரிகசித்துக்
கூவிப் புலம்பித் "தலித் இவன்!" என்று குரலெழுப்பித்
தாவிக் குதிக்கின்ற நாக ரிகமெங்குக் கற்றதுவே?..

எங்கள் தமிழன்னை ஈன்ற புதல்வனை இப்படியா
பங்கப் படுத்துவீர் உத்தர காண்டத்துப் பாவியர்காள்?
கங்கைக் கரையென்ன, காணும் கரையெங்கும் காட்சிதந்து
தங்கத் தகுந்தவன் தானெங்கள் ஐயன் தரணியிலே!..

இந்துக் கடற்கரை நின்றே இமயத்தை எட்டிநோக்கும்
செந்தமிழ்ச் செம்மலின் சிங்கம் நிகர்த்த சிலையிருக்க,
மந்த மதியினர்க் கும்பலின் கங்கை மருங்கினிலே
எந்த வகையினில் ஐயனின் தோற்றம் இலங்குவதே?..

தன்னை அளந்து தரணி அளந்து தடம்பதித்த
முன்னைச் சரித்திரம் முற்றும் அளந்த மொழிப்புதல்வன்
பொன்னை அளந்த புகழினன் என்னும் பொருளறியாச்
சின்னவர் முன்னர் திருவள்ளு வற்கேன் சிலையெடுப்பே?..

மதியாதார் வீடும் மடையர்கள் கோவிலும் மாளிகையும்
நதியோரத் தென்றலின் நச்சும் தமிழர் நமக்கெதற்கு?
குதியாட்டம் போடும் குரங்கிடம் நட்பினி கொள்வதுமேன்?
சதிகாரர் கங்கைத் தலம்விட்டு வா,எங்கள் சான்றவனே!..

அடக்க முடியலை: ஆத்திரம் தீரலை: அன்னியரின்
மடத்தனம் தன்னை மடக்க முடியலை: மாற்றலனின்
இடத்தில் உனக்கினி என்ன இருப்பு?சொல், எம்மவனே!
வடக்குக் கிறுக்கன் கிடக்கிறான்: வந்திடு, வள்ளுவனே!..

                ×××××

செவ்வாய், 19 ஜூலை, 2016

பொய்பேசாப் பைங்கிளி.



வெள்ளிக் குடமும் வெறுங்கால் கொலுசோடும்
பள்ளிசெல்லு முன்பே பணியாற்றும் - பிள்ளையவள்
கைவீசிச் செல்லும் கலையழகு காணீரோ,
பொய்பேசாப் பைங்கிளியே போல்!..

                     ××××

ஞாயிறு, 17 ஜூலை, 2016

முருங்கையும் வெறுங்கையும்!..

முற்றத்தே முருங்கையொன்றை நட்டு வைத்தால் 
       முதியவரும் இளமையுடன் வாழ்வார் என்று 
கற்றறிந்தார் பொதுவாகச் சொல்வார்; உண்மை. 
       காரணமும் அனைவருக்கும் தெரிந்த உண்மை..
மற்றிதனை நட்டவனோ வெறுங்கை யோடே
       மக்களிடை நடந்திடுவான் என்னும் கூற்றும்
நற்றமிழர் மத்தியிலோர் பழஞ்சொல் லாக
       நடமாடும் காரணத்தை அறிவீர் கொல்லோ?..

முதுகிழவர் முதுகினில்கூன் விழுந்த பின்னர்
       முன்னொருகைத் தடியூன்றி நடந்து செல்வார்:
எதுவரினும் முருங்கையினைத் தவறா(து) உண்டால்
       இத்தகுகைத் தடியொன்றும் தேவை யில்லை..
இதுகுறித்தே "முருங்கைநட்டான் வெறுங்கை யோடே
       இனிதுநடப் பான்! "என்னும் பழஞ்சொல் தந்தார் :
பொதுவழக்கில் பொருள்பொதிந்த பழஞ்சொல் ஒன்றைப்
       புகுத்தியநம் தமிழ்மரபின் புகழ்தான் என்னே!..

முருங்கைமரத் திற்(கு)"ஊரான் முதலி" யென்றும்,
       முருங்கைக்கன் றிற்(கு)"ஊரான் பிள்ளை" யென்றும்
அருங்குணங்கள் பேசும்ஆயுள் மருத்து வத்தில்
       அர்த்தங்கள் இருப்பதனை அறிகின் றோம்யாம்..
ஒருங்கிதனை நினைத்(து)"ஊரான் பிள்ளை யைநன்(கு)
       ஊட்டிவளர்த் தால்தன்றன் பிள்ளை நன்றாய்ச்
சிறந்துவளர்ந் தோங்கும்!"எனச் செப்பி வைத்தார்..
       செந்தமிழார்ப் பழஞ்சொல்லின் சீர்தான் என்னே!..

       
                            ××××××

சற்றும் ‘மனிதம்’ இல்லை!


ஊர்க்குருவிக் குலமே! -நீங்கள்
உச்சிவானிலே உலாவரும்போதும்
கழுகுகள் ஆவதில்லை -உங்களது
கர்வத்தில் உண்மையில்லை!

வான்கோழிக் கும்பல்களே! -நீங்கள்
வானம் வரைக்கும் சிறகு விரிப்பினும்
வண்ண மயில்களில்லை -உங்களின் 
வரிசை  நடனமில்லை!

மின்மினிப் பூச்சிகளே! -நீங்கள்
மிக்கப் பளபளப்போடு பறக்கினும்
மெழுகு வர்த்தியில்லை -தியாகம் உங்கள் 
மேனிக்குச் சொந்தமில்லை!

காக்கைகள் கூட்டங்களே! -நீங்கள்
காடு முழுதும் திரண்டு கரையினும்
காதுக்(கு) இனிமையில்லை - குயிலிசை
கற்றவர் நீங்களில்லை!

நாணல் குடும்பங்களே! - நீங்கள்
நாற்புறமும் அசைந்தாடிய போதிலும்
நாற்றுகள் ஆவதில்லை -நெல்லின் மணி
நற்கதிர் நீங்களில்லை!

எருக்குத் தோட்டங்களே! - உம்
இலைவழிப் பல்துளிப் பால்சுரந்(து) ஓடினும்
ஏந்த விருப்பமில்லை - விஷம் உம்பால்
என்பதில் சர்ச்சையில்லை!
காகிதத்துப் பூக்களே! -நீங்கள்
கண்ணைப் பறிக்கும் வனப்பில் இருப்பினும்
காதல் விளைவதில்லை -தேனை உங்கள்
காம்பு சுமப்பதில்லை!

கண்மாய்த் தவளைகளே! - நீங்கள்
காற்றைத் ‘தம்’பிடித்துக் காட்டினும் நாங்கள்
கலங்கிடப் போவதில்லை -நீங்கள் ஒன்றும்
காங்கேயம் காளையில்லை!

வெற்றுப் பட்டாசுகளே! -ஒளி
வெள்ளத்தினை நீங்கள் வாரி இறைப்பினும்
வெந்தழல் நீங்களில்லை - நான்கைந்து
வினாடிக்குள் நீங்கள்இல்லை!

சாதிச் சழக்கர்களே! - உங்கள்
சாகசங்கள் கோடி தாண்டிய போதும்
சரித்திரம் உங்கட்(கு)இல்லை! - அந்தோ!
உம்மில் சற்றும் ‘மனிதம்’ இல்லை!

ஒருவரும் வெல்லலையே!..

சங்குத்துறை அழகுக் கடற்கரையில் - எங்கள் 
       சரித்திரம் உறங்கிக் கிடக்கிறது.. 
பொங்கும் நினைவலைகள் ஒவ்வொன்றும் - நெஞ்சில்
       புதிய பூரிப்பு படைக்கிறது!..

ஐம்பதாண்டிற்கு முன்பிருந்தே - இதன்
       அருமை பெருமைகளை நானறிவேன்..
பைம்புனல் அலைகள் தவழ்ந்துவரும் - இந்தப்
       பள்ளம் கடற்கரையின் பாடறிவேன்!..

தாழையொடு கோட்டுப் புன்னைகளும் - நன்கு
       தழைத்த பச்சோலைத் தென்னைகளும்..
வேலிக் கற்றாழையொடு பிரண்டை - சுற்றி
       விரவிக் கிடந்த கடற் சோலையது!..

புத்தன்துறை சென்று படிப்பதற்கு - இந்தப்
       பொழிலின் வழியாகச் சென்றுள்ளேன்..
சத்தம் போட்டு பல பாடல்களைச் - சொல்லிச்
       சங்கீத பாடம் பயின்றுள்ளேன்!..

கொட்டுகுளம் வீழ்ந்து குளித்துள்ளேன் - அங்குக்     
       குட்டிச் சிப்பிநண்டு பிடித்துள்ளேன்..
செட்டு சேர்த்து அடி வைத்துள்ளேன் - சில
       சீனடிகள் அங்குப் படித்துள்ளேன்!..

ஈர மணல் திடலின் உள்ளிருந்து - நான்
       எடுத்த விளாங்கினை வகுப்பறையில்
ஊரவிட்டு இளம் டீச்சர்களைப் - பயந்(து)
       ஓடவிட்டுக் குறும்(பு) இழைத்துள்ளேன்!..

முளளுருண்டைகளை உருட்டிவிட்டு - அவை
       முந்திடாதபடி ஓடி வென்று..
எள்ளுருண்டைகளைப் பரிசு பெற்று - மூச்(சு)
       இரைக்க இரைக்க நான் சிரித்துள்ளேன்!..

அள்ளும் எழில் சங்குத் துறையலையே - உன்மேல்
       ஆசை எனக்கின்னும் குறையலையே..
உள்ளம் கவர் பள்ளம் வெள்ளலையே - உன்னை

      ஒருவரும் இதுவரை வெல்லலையே!..



                       ****

ஆறாக் காயம்!..


இடக்கையில் மழலை யேந்தி, 
         இன்னொரு கையால் உச்சிக்
குடத்தினைப் பிடித்துத் தாங்கிக்
        குலமகள் செருப்பில் லாமல்
நடக்கையில்.. தனது காலில்
      நறுக்கெனத் தைத்த முள்ளை
எடுத்த தன் மகனின் கையில்
           இன்னமும் ஆறாக் காயம்!..


       ***

சீரிய "ரமதான்" வாழ்த்து!


ஓரிறைத் தத்து வத்தின்
         உண்மையை உய்த்து ணர்ந்து,
காரிருள் கிழித்துத் தோன்றும் 
      ககனவெண் பிறையைப் போன்று,
ஆரினும் அமைதி காக்கும்
        அறவழித் தூயோ ருக்(கு)எம்
சீரிய "ரமதான்" வாழ்த்து!
         'தீன்'தரும் பெருநாள் வாழ்த்து!..

செல்லப் பேத்திக்கு... பிறந்தநாள் வாழ்த்து!



செல்லப் பேத்திக்கு... 
சிரிக்கும் ராசாத்திக்கு... 
நல்ல மகளுக்கு..
நாளைய புகழுக்கு...

பத்தாம் அகவைக்குப்
படியெடுத்து வைப்பவட்கு...
முத்தான "மரியா"க்கு...
முற்றன்பும் உரியாட்கு...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!..

அன்புடன்,
தாத்தா, மற்றும் பாட்டி.

'ழகரம்' பழகு!..


தமிழின் 'ழகரம்' தனியழகு!
தமிழா, அதைநீ தினம் பழகு!

அழகில் ழகரம் இருப்பதனால்
அச்சொல் அழகாய் ஒலிக்கிறது..
அழகின் ழகரம் தவறானால்
அய்யோ! எனமனம் சலிக்கிறது!..

நற்றமிழ் பயில்வோர் நாப்பழக்கம்
நம்மவர் இனத்தை அளக்கிறது..
கற்றவர் ழகரத்(து) ஒலிச்சுத்தம்
காலமும் தமிழை வளர்க்கிறது!..

குழலிலும் யாழிலும் ழகரங்கள்
கொஞ்சிடும் இசையைக் கொடுக்குது,பார்:
உழவிலும் மழையிலும் ழகரம்தான்
ஓசையின் அழகை விதைக்குது,பார்!..

வாழையும் பழமும் ழகரத்தால்
வழங்கும் சுவைதனை யார்மறுப்பார்?
தாழையின் பெயரில் ழகர ஒலி
தரித்திடும் நறுமணம் யார்மறப்பார்?..

தொழுகையைச் சொல்லும் போதினிலே
தூய்மையை ழகரம் தருகுது,பார்!
முழுமையென்(று) உரைக்கும் ஓசையிலே
முத்தமிழ் மணமே பெருகுது,பார்!..

ஈழம் எனுமொரு சொல்லினுக்குள்
ஈரம் விளைப்பது ழகரமன்றோ?..
ஆழ நீர்நிலை ஆழியிலும்
அழகாய்த் தவழ்வது ழகரமன்றோ?..

தரணியின் மொழிகள் எவற்றுள்ளும்
தமிழ்போல் ழகர எழுத்தில்லை..
உரமுறு தமிழா, உணர்ந்திடுவாய்:
உன்னினும் உயர்ந்தோர் எவருமில்லை!..

மொழியும் விழியும் ழகரமின்றி
முழுமை பெற்றிட முடியாது..
மொழியில் ழகரம் வலுவடைந்தால்
மூத்த தமிழ்க்குடி மடியாது!!..

பாட்டரசன் பிறந்தநாள் வாழ்த்து


பாட்டரசன் என்னும் பழகுதமிழ்ச் சான்றோற்(கு)இன்(று)
ஏட்டினில்யான் வாழ்த்தொன்(று) எழுதிவைத்தேன் - நாட்டிலுள்ளோர்
போற்றுகவி நாளும் புனைவோன் பிறந்ததினம்
ஏற்ற முறமலர்ந்த(து) இன்று!..

மரபுக் கவிபுனைந்து, மண்மகிழத் தந்து,
தரம்படைதத பாட்டில் தவழ்ந்(து),இங்(கு) - உரம்வாய்ந்த
யாப்பின் அரும்பயனை யாண்டும் எடுத்துரைக்கும்
பாப்புலவன் பாட்டரசன் பார்!..

எங்கள் உடன்பிறப்பே! ஏரார் கவிப்பிறப்பே!
சங்கத் தமிழின் சரிப்பிறப்பே! - உங்கள்
பிறந்ததினம் பாவின் பெருமைதினம்: உள்ளம்
திறந்துதினம் நல்குக,பாத் தேன்!..

அன்புடன்,
தொ. சூசைமிக்கேல்.

கண்ணதாசன் என்னும் கவி!


சாலத் தமிழ்செய்த சான்றாண்மைப் பேராளன்:
காலத்தை வென்ற கவிப்புலவன் - ஞாலத்தே
எண்ணற்றோர் நெஞ்சில் இடம்பெற்ற நூலரசன்:
கண்ணதாசன் என்னும் கவி.

செட்டிநாட்டுச் செல்வம்: திரைப்பாட்டின் வான்சிகரம்:
மட்டிலாக் கீர்த்தி மணிமகுடம் - மெட்டினுக்குள்
நுண்ணறிவைக் கோத்(து)எம்மை நூறுதரம் பாடவைத்த
கண்ணதாசன் என்னும் கவி.

சொல்லடுக்கில் பாட்டின் சுகம்தந்தான்: செந்தமிழ்ப்
பல்லக்கில் ஏறிப் பவனிவந்தான் - வெல்லுதற்(கு)
இன்னொருசொல் காணா இலக்கியத் தாள்விரித்தான்:
கண்ணதாசன் என்னும் கவி.

அர்த்தமுள்ள இந்துமத ஆவணமும், மானிடர்தம்
கர்த்தர் புகழ்(இ)யேசு காவியமும், - தர்க்கமிலாத்
தண்ணமுதில் தோய்த்துத் தரணியர்க்குத் தந்தமகன்
கண்ணதாசன் என்னும் கவி.

பாமரனின் சுண்டுகளும் பைந்தமிழை உச்சரித்துக்
காமமுற வைத்த கலைப்பித்தன் - மாமலர்சேர்
வண்ண மடந்தை வரம்பெற்ற சொற்சுரபி
கண்ணதாசன் என்னும் கவி.

"நில்லேன்;அஞ் சேன்!"என்று நெந்சை நிமிர்த்தியவன்:
சொல்லேர் உழவர்க்குத் தோழனவன் - பல்லோர்கா(து)
உண்ணற்(கு) அமிழ்(து)ஈந்த ஓங்கு தமிழ்வள்ளல்
கண்ணதாசன் என்னும் கவி.

பாட்டில் இசையின் பதிவிருக்க, கேட்போர்கள்
மேட்டில் அமர்ந்துகொண்டு மெய்சிலிர்க்க, - நாட்டிலெங்கும்
பண்ணரங்கம் கோடி படரவிட்ட பேரிறைவன்
கண்ணதாசன் என்னும் கவி.

"பிறவாயோ மீண்டும், பெருங்கவிஞா!" என்(று)ஈண்(டு)
அறவோர் பலரும்அழைக் கின்றார்: - மறவாமல்
விண்ணோர் சபைக்கு விடைகூறி இங்(கு)எழுவான்
கண்ணதாசன் என்னும் கவி.

அஞ்சலி!!..

ஈரம் சொல்லும் அஞ்சலி!.. 
"""""""""""""""""""""""""""""""""""""""""


இணைஎவரு மற்ற எம்மவர் - இன்று 
     இறப்பெய்தி விட்ட நல்லவர்.. 
நினைவிருக்கும் வரையில் நிற்பவர் - எங்கள் 
     நெஞ்சத்தில் குடியி ருப்பவர்!..

கடலோர மக்கள் காவலர் - நெய்தல்
     காணிகளின் வள்ளல் நாயகர்..
மிடல்சான்ற ஜேப்பி யாரவர் - போன்ற
     மீனவர்தம் செம்மல் யாரவர்?..

தனியொருவ னாக நின்றவர் - வரும்
     தடைகள்தமை எளிதில் வென்றவர்..
துணிச்சல்மிகு கொள்கை பூண்டவர் - ஒரு
     துறைமுகத்தைத் தந்து ஆண்டவர்!..

ஏழைகளின் வீட்டில் தீபமாய் - கல்வி
     எ
ழுத்தறிவை யூட்டும் வேதமாய்.. 
தாழ்வதில்லை என்னும் பாடமாய் - நின்ற
     தந்தைசென்றார் இன்று தூரமாய்!..

நெடிதுயர்நம் தந்தை தோற்றமும் - இதழ் 

     நிறைந்தசிரிப் புடைய வண்ணமும்..
நொடிப்பொழுதில் ஓடிப் போனதேன்? - மனம்
     நொந்துவிட விதியும் விழைந்ததேன்?..

நன்றிசொல வார்த்தை ஒன்றிலை - எங்கள்
     நாயகர்க்கு மரணம் இன்றிலை..
என்றுமுள(து) எங்கள் அஞ்சலி - கண்ணின்
     ஈரமெலாம் சொல்லும் அஞ்சலி!!..

பிறந்தநாள் வாழ்த்து!..


தூரிகை யேந்தி நம்மைச்
        சுகம்பெற வைக்கும் தோழர் :
"ஆரிவர்?" என்றே கண்கள் 
         அகன்றிட வைக்கும் சீனு:
பாரிடைத் தான்பி றந்த
       பரவச விழாக்கொண் டாடும்
சீரிய நன்னாள் இன்று..
          செந்தமிழ் வாழ்த்துச் சொல்வேன்!..

அன்புடன்,
தொ. சூசைமிக்கேல்.

மூடர்காள், உண்மை சொல்வீர்!



அண்ணனும் தங்கை யும்இங்(கு)
         ஆழிவெண் மணல்தீ ரத்தில்
வெண்ணுரை அருகே தாங்கள் 
         விரும்பிய நடைமேற் கொள்ளும்
கண்ணிறைக் காட்சி எம்மைக்
         களிப்புறச் செய்வ தாகும்..
இன்னமும் எதிர்கா லத்தில்
         இதுதொடர்ந் திடவும் வேண்டும்!..

இருப்பினும் எமதெண் ணத்தில்
         எரிதழல் கொட்டும் வண்ணம்
உருப்படாத் துறைமு கத்தின்
         ஊழலார் திட்டம் தீட்டி,
பொறுப்பிலாச் சதியின் மாந்தர்
         புதுப்பணி தொடங்கி விட்டார்..
திருப்பியும் கடற்க ரைக்கே
         தீமைகள் ஆற்று கின்றார்!..

வர்த்தகத் துறைமு கத்தை
         வழங்குவ தாகச் சொல்லும்
மெத்தமே தாவி கட்கு
         மீனவன் விடுக்கும் கேள்வி:
இத்தகு திட்டம் எங்கே?..
         இனயமா? குளச்ச லா?ஏன்
மொத்தமாய்க் குழப்பு கின்றீர்?
         மூடர்காள், உண்மை சொல்வீர்!..

குளச்சலுக் காக நீங்கள்
         கொண்டுவந் திருந்த திட்டம்
விலக்கிய நோக்கம் என்ன?..
         விளக்கிட மறுப்ப தென்ன?..
நலச்செயல் இதுவென் றேநீர்
         நாடகம் நடிக்கும் வேலை
உளைச்சலைத் தருவ தைநீர்
         உணர்ந்திட மறுப்ப தென்ன?..

கடற்கரை மாந்த ரைநீர்
         காவுகொ டுத்த பின்தான்
நடக்குமா நன்மை யெல்லாம்?..
         நம்பவா யாம்நும் கூற்றை?..
அடக்கியா ளுகின்ற போக்கை
         ஆரிடம் காட்டு கின்றீர்?..
தொடத்துணி வுண்டா, எங்கள்
         துறையர்வாழ் வாதா ரத்தை?..

வரைவினை எமக்குக் காட்டு:
      வாய்ச்சவ டால்நிப் பாட்டு!
அறையினில் நடப்ப தென்ன?
         அம்பலம் அறியக் காட்டு!
முறையிலா நீதி யொன்றை
         முன்னிலைப் படுத்து கின்ற
துறைமுகத் திட்டம் யாரைத்
         தொலைப்பதற் கென்று காட்டு!..

பதவியைத் துறப்பே னென்றும்
         பார்க்கலாம் ஒருகை யென்றும்
உதறலோ(டு) உளறும் போக்கால்
         ஒருபருப் பும்வே காது..
மதவெறிக் கள்ளை யூட்டி
         மறுபடி எங்கள் மண்ணில்
விதவிதக் குழப்பம் செய்ய
         விரும்பினால் அதுதே றாது!..

அலைகள்வந்(து) எங்கள் வீட்டை
         அடிக்கடி இழுத்துச் செல்லும்
நிலைமைநீர் கண்டி ருந்தும்
         நினைத்திரோ எம்மைப் பற்றி?..
குலைகுலை யாக 'நோட்டு'
         கொட்டிடும் "ஹார்பர்" மட்டும்
மலையென மனதில் வைத்தீர்:
         மானுடம் எங்கே வைத்தீர்?..

இரக்கமில் லோரே, நீங்கள்
         எமைவிட்டு விலகிப் போங்கள் :
அரக்கரே, ஆழி மைந்தர்க்(கு)
         அல்லலே நினைக்கின் றோரே,
உரக்கநீர் கூவிக் கூவி
         உழைப்பதை நிறுத்திக் கொள்க:
பரக்கவே கிடக்கும் நெய்தல்
         படுகையின் உரிமை வாழ்க!!..

விரைந்திடு, வெண்சங்கே!











அசையாமல் அமர்ந்திருக்கும் ஆழிவெண்சங்கே - உன்னை 
          ஆர் இங்கு அனுப்பி வைத்தார் ஆழிவெண்சங்கே?..
திசைமாறி வந்தனையோ ஆழிவெண்சங்கே? - உனக்குச்
      சேதியொன்று சொல்ல வேண்டும்  ஆழிவெண்சங்கே!..

கடலுக்குள் நடப்பதென்ன ஆழிவெண்சங்கே? - எங்கள்
     கணணீரை யாரறிவார் ஆழிவெண்சங்கே?..
திடல்விட்டுத் திரைக்குள்ளே  சென்றுவா சங்கே - எங்கள்
     செந்தமிழ் மீனவர் துயரம் கண்டுவா சங்கே!..

மீன்பிடிக்கச் செல்லுகின்றோம் ஆழிவெண்சங்கே - எம்மை
      மிருகங்கள் மேய்வது ஏன்,  ஆழிவெண்சங்கே?..
ஊன்பசிகொண்(டு) அலைகின்ற  ஓநாய்க் கூட்டம் - செய்யும் 

      உபத்திரவம் ஒழிவ(து) என்றோ ஆழிவெண்சங்கே?..

வலையறுத்து மீனெல்லாம் கடல்தனில் வீசிச் - சுற்றி
      வளைத்து சிறைப்படுத்துதல்தான்நடக்குது சங்கே!
அலைகடலின் அடல்மறவர்அடிமைகள் என்றே - எங்கள்
      அரசாங்கம் நினைக்கிறதா ஆழிவெண்சங்கே?..

கடிதத்தை எழுதுகின்ற  கடமையில் மட்டும் - இங்குக்
     கடுகளவும் குறைவில்லை  ஆழிவெண்சங்கே..
துடிதுடிக்கும் மீனவர்க்கோ  ஒவ்வொரு நாளும் - கடலில்
      தொடருவது சோகமன்றோ ஆழிவெண்சங்கே?.

படகுகளை இழந்து நிற்கும் பரதவனிங்கே - வெறும்
      பாய் கொண்டா மீன்பிடிப்பான்ஆழிவெண்சங்கே?..
அடம்பிடித்துத் தர மறுக்கும் சிங்களத்தானுக்(கு) - இந்த
      அரசாங்கம் அஞ்சுவதேன் ஆழிவெண்சங்கே?..

வெண்ணுரையைத் தழுவி உடன் விரைந்திடு சங்கே - நீந்தி
      வெட்டுக்கும் விலங்காலே சென்றிடு சங்கே..
கண்ணெதிரே சிங்களனைக் கணடிடு சங்கே - அந்தக்
      காடையன் மூஞ்சியில் காறி உமிழ்ந்திடு சங்கே!!..

சுமைதாங்கிப் பூனையார்..



அமைதியாய்க் கோழிக் குஞ்சை
        அமர்ந்திடச் சொல்லி, எம்முன் 
சுமைதாங்கி வேஷம் போடும்
        சுட்டியாம் பூச்சைக் குட்டீ!
இமைகளால் கண்டோம்: குஞ்சின்
        இடதுகால் ஊனம் என்று..
எமையினி ஏமாற் றாதே:
        இறக்கிவை அதனைக் கீழே!..

மலையருவி மங்காய்!







மன்னித் தருள்வாய், மலையருவி மங்காய்!நான்
உன்னைப் பருகவந்த(து) உண்மைதான் - என்னைநீ
இப்படியே வாயோ(டு) இறுகணைத்து முத்தமிட்டால்
எப்படிநான் போவேன்வீட் டிற்கு?..

அன்னைக்கோர் அஞ்சலி!


கரங்களில் ஏந்திய தீபம் - அது
காட்டுது தாய்மையின் வேதம்.. 
திறம்படும் ஆட்சியின் தொடக்கம் - அன்னை
தெரசாவிற்(கு) ஒரு வணக்கம்!..

அரசியல் பாதையின் பயணம் - இதில்
அன்னையின் ஆசியும் வரணும்..
தரமிகு பணிகளை ஆற்ற - அந்தத்
தலைவியின் துணைதனைப் பெறணும்!..

காண்பதற்(கு) அரியதோர் காட்சி - இது
காலம் தரும் சின்ன சாட்சி..
மாண்புடை முதல்வர் மம்தா - வங்க
மண்ணில் காண்க நல்லாட்சி!..

அஞ்சலி என்பது இதுதான் - இதற்(கு)
ஆயிரம் உள்ளது பொருள்தான்:
நெஞ்சினில் அன்னையின் தியாகம் - நின்று
நிலைத்திடில் மலைகளும் பனிதான்!!..

கனிச்சுவை!. தனிச்சுவை!..


வித்தினை மறைத்தி டாமல் 
வெளியிலே தெரியக் காட்டிக்
கொத்துகொத் தாகத் தொங்கும் 
கொல்லாம்ப ழங்காள்! நீவிர்
எத்தனை நாள்கள் இன்னும்
எங்களை மறந்தி ருப்பீர்?..
ஒத்தைம ரத்துக் கொம்புக்(கு)
ஒருவிடை தரமாட் டீரோ?..

பண்டைய நாளில் எங்கள்
பள்ளம்ஊர்ப் பெருந்து றைக்கும்
அண்டையில் விளைக ளுக்குள்
அடர்த்தியாய்க் காய்த்தி ருந்தீர்..
கண்டதும் குறிதப் பாது
கல்லெறிந்(து) உம்மை வீழ்த்தி
உண்டதை நினைக்கும் போழ்தில்
ஊறு(து)உம் பழச்சு வைதான்!..

கடல்குளிக் கையிலே கொல்லாங்
கனிகளை விட்டெ றிந்(து),எம்
உடலொடு கனிக ளுக்கும்
உப்புநீர்க் குளியல் தந்து,
மடமட வென்று வெள்ளை
மணல்மிசை வந்த மர்ந்து,
படபட வென்று தின்ற
பழச்சுவை தனிச்சு வைதான்!..

முந்திரிப் பருப்பு காயும்
முன்னமே அறுத்துத் தின்னும்
தந்திரம் அறிந்த நானும்
தம்பிமார் பலரும் நீண்ட
தொந்தர(வு) இழைக்க, எம்மைத்
துரத்திய நாடான் மாரை
இந்தநே ரத்தில் கூட
எண்ணிடில் நகைச்சு வைதான்!..

குமரிமா வட்ட மெங்கும்
கொல்லாம்ப ழத்தின் ஆட்சி..
எமதுமண் வாச னைக்குள்
என்றும்கொல் லண்டி வீச்சி..
நமதுநாட் டிற்குக் காசு
நல்கிடும் முந்தி ரிக்குத்
தமிழனின் புதிய ஆட்சி
தரட்டும்ஓர் தகுந்த நீதி!!..

மழைமேகம், தமிழ் மேகம்!



மழைமேகம் மழைமேகம்
மலைமேலே மழைமேகம்..
மலைவளமிகு மலைமகளொடு
மளமளவென இழைமேகம்!...

இழைமேகம் இழைமேகம்.. 

எழிலுடனே திகழ்வதனால்
"எழிலி"யெனப் புலவோர்கள்
அழைமேகம் அழைமேகம்!...

அழைமேகம் அழைமேகம்..
அடைமழையை எதிர்பார்த்து
விளைநில வேளாண் மாக்கள்
விழைமேகம் விழைமேகம்!...

விழைமேகம் விழைமேகம்..
விசும்பின் தேன்துளி பெற்றுப்
பசும்புல்லின் தலைகாத்தற்(கு)
உழைமேகம் உழைமேகம்!...

உழைமேகம் உழைமேகம்..
ஊருக்குத் 'துப்(பு)' ஆக்கித்
தப்பாது பணியாற்றித்
தழைமேகம் தழைமேகம்!...

தழைமேகம் தழைமேகம்..
தலையாய தவமேகம்:
தளை,தொடையொடு நடமிடுகவித்
தமிழ் மேகம்.. அம்மம்மா!!...