Tamil

திங்கள், 3 அக்டோபர், 2016

"வண்ணாத்திப் பூச்சி"

வண்ணத்துப் பூச்சியே! - உன் பெயர் 
'வண்ணாத்திப் பூச்சி'யா? 
பெண்ணாட்டி பெயரிலே - உனக்கொரு
பிரியம் வந்துற்றதா?..
"பட்டர் ஃப்ளை" என்றுதான் - பெண் பெயர்
பாட்டிலும் எழுதினான்..
இட்டுக்கொள் பேருதான் - நீயும் ஓர்
இனிய 'வண்ணாத்தி'தான்!..
மலர்த் தோட்டம் எங்கணும் - நீ தரும்
மகரந்தப் பகிர்வினில்..
பலவண்ண மேனியில் - சிறகொடு
பறப்பதேன் தொலைவினில்?..
தேனுண்ட காமமோ? - நான் உனைச்
சிறைப்பிடித்தல் சிரமமோ?
வான் உலவும் கர்வமோ? - உன்னையென்
வலைப்படுத்தல் கடினமோ?..
உறைவிடம் சொல்லுவாய் - எனக்கொரு
உதவி நீ செய்குவாய்..
நறுந் தேனைக் கொண்டு போய்ச் - செலவிடும்
நாகரிகம் நவிலுவாய்!..
தேன் தூங்கும் பூவுடன் - தினம்தொறும்
'தேன் நிலவு'க் கூடலா?..
காண்கின்ற மலரெலாம் - முயங்கிடல்
கற்பின்மை அல்லவா?..
கற்பின்மை என்பினும் - உன்செயல்
கருணைக்(கு) உகந்ததே..
தப்பின்மை காண்கிறேன் - கொங்கினைத்
தருமம் நீ செய்வதால்!..
எண்ணற்ற மலர்களை - நீதான்
இனப் பெருக்கம் செய்கிறாய்..
கண்ணுறு மலர்க்கெலாம் - நீதான்
கருவறைகள் தருகிறாய்!..
சூற்பைகள் காய்களாய் - பொழில்தனில்
தொடர்ந்(து) அவை விதைகளாய்..
பார்ப்போர்க்கு மரங்களாய் - நிலமிசைப்
பசுமை உன் பணிகளாய்..
எந்நாளும் மலர்களைத் - தழுவியே
இயற்கையைக் கழுவிடும்
வண்ணத்துப் பூச்சியே! - நீயொரு
"வண்ணாத்திப் பூச்சி"யே!..
*******

வியாழன், 15 செப்டம்பர், 2016

ஓணம்.. பொன்னோணம்!..


மண்ணகத் தேமா வேலி
     மன்னவன் வருவான் என்னும் 
எண்ணமோ(டு) ஒவ்வோர் ஆண்டும்
     இனியகே ரளத்தின் மாந்தர்
பொன்ஓணம் விழாக்கொண் டாடிப்
     பூரித்(து)இ ருக்கும் இந்நாள்
கண்ணினுக்(கு) இனிய காட்சி:
     களிப்பொடு வாழ்த்துச் சொல்வோம்!..

முன்றிலில் அத்தக் கோலம்:
     முரசுகள் முழங்கும் மேளம்:
தென்றலில் ஆடும் ஓணத்
     தீஞ்சுவைப் பாட்டுத் தாளம்:
நன்றுடன் வரிசை கட்டி
     நடமிடும் மலையா ளத்துப்
பெண்டிர்தம் தம்பு ராட்டிப்
     பேரழ(கு) ஒளிரும் ஓணம்!..

ஊஞ்சலில் ஆடு கின்றார்
     உற்சவத் தேவ தைமார்..
தேன்சுவை விருந்து வைத்துச்
     சேச்சிமார் அசத்து கின்றார்..
"யாம்சளைத் தவர்அல் லோம்!"என்(று)
     யாங்கணும் பொருள்சென்(று) ஈட்டும்
நாஞ்சில்நன் னாட்டா ருக்கும்
     நல்லபொன் ஓணம் இன்று!..

பொன்னுகே ரளத்தி லுள்ள
     புண்யகோ டிகள்க்(கு)இந்(நு) என்டே
சின்னதோர் அபேட்ச யுண்டு:
     சிறுவாணி யினைச்செ றுத்து
பின்னொரு அணகட் டண்டா:
     பிரஸ்னமொந்(நு) உண்டாக் கண்டா:
அன்(னி)யன்டே கூட்டு நிங்ஙள்
     அவசரப் பெடலும் வேண்டா!..

உலகெலாம் மலையா ளத்தார்
     ஓணநாள் கண்ட போதும்,
பலகாலம் தமிழ்நாட் டாரும்
     பழகிவந் துள்ளார் ஓணம்:
நலமுடன் நாமும் சொல்வோம்
     நண்பினர்க்(கு) ஓணம் வாழ்த்து!
வளமுடன் நீடு வாழ்க,
     வள்ளங்க ளியின்பொன் ஓணம்!..

*******

பேரச் செல்வங்கள் நடுவில்..

 
ஈரிருபத் தாண்டின் முன்னர் 
     என்னுடனே பயின்ற நண்பர்:
பேரிறைவன் அருளால் ஆயர்
     பெருந்தகையென்(று) ஆன பின்னர்,
சீரிளமை யோ(டு)என் பேரச்
     செல்வங்கள் நடுவில் தோன்ற..
ஆரினும்நான் பேறு பெற்றேன்
     அரியபடம் இதனைக் காண!.. 

ஈடிலாத் தியாகம்!..


பீடியைச் சுற்றும் எங்கள் 
     பெண்டிர்காள்! உங்கள் தியாகம் 
ஈடிலா த(து)எனும் உண்மை 
     எவர்அறி கின்றார்? நீவிர்
நாடி,ந ரம்பைத் தேய்த்து
     நாளெலாம் கண்ணீர் சிந்தி
ஓடிஉ ழைத்தா லன்றோ
     ஊரில்ஓர் பட்ட தாரி?... 

எங்கள் கரைமடிக் கம்பால்!..


தென்குமரிப் பள்ளம் ஊரில் 
          திரையலையின் வெள்ளத் தேரில்
பொங்கிவரும் மீன்பி டிக்கப்
          பூட்டிய கம்பால் - தென்னைத்
தங்கநிறச் சவுரி பெய்து,
          தக்கபடி முறுக்கி, எம்மோர்
செங்கரங்கள் இழுப்ப தற்குத்
          தீட்டிய கம்பால்!..

நீலநிறக் கடல்வி ளிம்பை
          நிலக்கரையோ(டு) இணைத்துக் கட்டிப்
பாலமெனப் பயன்வி ளைக்கும்
          பண்டைய கம்பால் - கரையின்
சேலளந்த கெட்டிக் காரர்
          சீரளந்த வரிசை கட்டி,
நாலடிநா டோடிப் பாடல்
          நடத்திய கம்பால்!.

கட்டுமரம் கடலில் காண,
          கயிறுவடம் தரையில் காண,
தட்டுமடி வளப்பு காணும்
          கரமடிக் கம்பால் - வெண்மைப்
பட்டுமணல் விரிப்பில் நின்று
          பாட்டுமணம் பரப்பும் ஆழிச்
செட்டிகுலம் சேர்ந்(து)இ ழுக்கும்
          சித்திரக் கம்பால்!..

வெட்டுகடல் வெலங்கே வெள்ளி
          வெட்டமிடும் வேளா மீனைக்
கட்டுதற்(கு)எம் ஆ(ண்)வீ ரன்மார்
          காட்டிய கம்பால் - மேளம்
கொட்டுகிற குருகும் கொக்கும்
          கூட்டமொடு குலவை யிட்டுக்
கொட்டமடிப் பதனைக் காணக்
          கூட்டிய கம்பால்!..

வட்டமுறச் சுழற்றிப் போட்டு
          வலியவடத் தலக்கைக் காரன்
எட்டநின்று மீனைக் காணற்(கு)
          இணங்கிய கம்பால் - ஈரம்
பட்டவுடல் தளர்ந்தி டாமல்
          பழக்கமுடன் இழுக்கும் காட்சி
கிட்டநின்று பார்த்துப் பார்த்துக்
          கிறங்கிய கம்பால்!..

வெண்ணுரையின் திடலைத் தேடி
          விரைந்துமடிக் குள்ளே மீன்கள்
பண்ணுகிற விளையாட் டெல்லாம்
          பார்த்திடும் கம்பால் - நெய்தல்
மன்னவர்தம் மீன்பா டெல்லாம்
          மண்ணுலகில் காணக் காண
மகிழ்ச்சியென மனதால் எம்மை
          வாழ்த்திடும் கம்பால்!..

முக்குவர்தம் ஒற்று மைக்கும்
          முதியதமிழ்ப் பண்பாட் டிற்கும்
பக்குவமாய்ச் சான்று கூறும்
          பரம்பரைக் கம்பால் - இந்தத்
தெக்குதிசை மக்கள் மீது
          திணித்துவிடும் சதியை வீழ்த்தும்
சின்னமெனத் திகழும் எங்கள்
          சிந்தனைக் கம்பால்!..

துறைமுகத்தைத் திணிக்கப் பார்க்கும்
          சொந்தபுத்தி இல்லா தாரின்
கறைமுகத்தைக் கண்டு பொங்கும்
          கரமடிக் கம்பால் - தீயோன்
மறைமுகமாய் எதுசெய் தாலும்
          மடிக்குள்ளே வீழ்த்தி, மாற்றான்
அரைமுகத்தை அறிய வைக்கும்
          அதிரடிக் கம்பால்!.. 

பொன்னார் புறப்பட்டுள்ளார்!..


ஒய்யார நன்னடையும், அடுக்க டுக்காய்
         உச்சியின்மேல் பன்னிரண்டு கலமும் தாங்கி.. 
மெய்யார வேர்த்தபடி நடந்து செல்லும்
         மெல்லிடையீர்! ஒருநிமிடம் நில்மின்! நீவிர்
கையாரப் பிடிக்காமல் கலங்கள் வீழாக்
         கலையறிந்த தாயெண்ணிக் கர்வம் கொள்ளேல்:
பொய்யாரப் பலகலன்கள் பூட்டிக் காட்டும்
'        பொன்னார்'என் றொருவர்இதோ புறப்பட் டுள்ளார்!.. 

கண்டதுண்டா?..


உருண்(டு)உருண்டு உறுமிவரும் கடல்விளிம்பில் - எங்கள்
உடைமைகளின் திருப்பயணம் தொடங்குது,பார்:
பறந்துசெல்லக் காத்திருக்கும் படகினைத்தான் - அலைகள்
பாய்ந்துவந்து சித்ரவதைப் படுத்துது,பார்!..

கடல்நெடுகே பெரும்பயணம் செல்வதற்கும் - எந்தக்
காற்றினுக்கும் பதில்கூறிப் பாய்வதற்கும்,
உடன்இருக்கும் அடல்மறவர் உழைப்பதற்கும் - என்றும்
உற்றதொரு வாகனமாம் படகினைப்பார்!..

நீரோட்டம் கண்டுவலை இளக்குதற்கும் - சுற்றி
நீவாடு பார்த்துமடி வளைப்பதற்கும்,
யாரோடும் எப்போதும் அருகிருக்கும் - எங்கள்
யாத்தினத்துக் காவலனின் நிலைமையைப்பார்!..

எங்கெல்லாம் கடல்ஆழம் உள்ளதென்றும் - நாங்கள்
எவ்விடத்தில் மீன்வேட்டம் புரிவதென்றும்,
எங்களுக்குத் தெரிவிக்கும் நண்பனுக்கே - அலைகள்
இடர்செய்து தடுக்கின்ற காட்சியைப்பார்!..

தடுத்திடினும் தலைகீழாய் நிறுத்திடினும் - நாங்கள்
தள்ளுகின்ற யாத்தினங்கள் தடைபடினும்,
அடுத்தடுத்து மீனவர்கள் முயல்வதைப்பார் - மிடல்சால்
அடல்மறவர் கடற்பரப்பில் நுழைவதைப்பார்!..

கடற்பரப்பில் எம்மவர்கள் நுழைந்துவிட்டால் - வீரக்
கவசமென விளங்குவ(து)இப் படகுதானே?
இடம்வலம்எல் லாம்அறிந்து கொள்ளுதற்கும் - கடலில்
ஏற்றதொரு கருவியும்இப் படகுதானே?..

ஆழிபடு திரவியங்கள் அத்தனையும் - நெய்தல்
அரையர்களை அல்லா(து)இங்(கு) ஆரறிவார்?
நாழிதொறும் படகினையே பயன்படுத்திப் - பெற்ற
ஞானமிந்த ஞாலமதில் யார்பெறுவார்?..

துறைமுகத்தைக் கொண்டுவரத் துடிப்பவனே - நீஓர்
துளியேனும் எம்கருத்தைக் கேட்டதுண்டா?
கரையோரம் கடல்யுத்தம் நடத்துகையில் - நாங்கள்
கண்டதுண்டம் ஆவதனைக் கண்டதுண்டா?.. 

குறளோன் மீது இருள்!..


ஆகஸ்டு பதினைந் தாம்நாள்.. 
       ஆறேமுக் கால்ம ணிக்கு.. 
வேகமாய்க் கதிரோன் மேற்கில்
    வீழ்ந்தபின்.. விவேகா னந்திற்(கு)
ஏகமாய் ஒளிவெள் ளத்தை
        இறைத்தவர், முப்பா லின்கார்
மேகமாம் குறளோன் மீது
      மிச்சமாய் இருள்தான் வைத்தார்!.. 

உழுதுண்டு வாழ்வார்!..


ஒற்றைமகன் தன்பின்னே நடந்து வந்தான்:
          உழவுபற்றித் தந்தையிடம் பாடம் கேட்டான்:
"கற்றதொழில் நாட்டுக்கே அன்னம் வார்க்கும் 
           கலையப்பா! மறவாதே, மகனே!" என்றான்:
பெற்றெடுத்த பிள்ளையிடம் விவசா யத்தின்
        பெருமைதனை விதைத்துவிடும் தகப்பன் மாருக்(கு)
உற்றநன்றி நாளையந்தப் புதல்வர் செய்வார்:
           உழுதுண்டு வாழ்வாரே உலகை ஆள்வார்!.. 

கும்பாரிக் கல்!..


தென்தமிழ் மேற்குத் திரைகடல் ஓரத்தில் 
கண்கவர் தோற்றத்தில் காட்சிதரும் - குன்றுகளில்
ஒற்றைப் பெருங்கல்லாய் உட்கார்ந்(து) இருக்கும் 
கற்றூணாம் கும்பாரிக் கல்.

உச்சிவரை எப்படியோ ஊர்ந்த நினைவுகளை..
கச்சிதமாய்ப் பட்ட(ம்)விட்ட காலத்தை - அச்சமின்றி
நண்பரொடு நின்று நடுவானம் நோக்கியதைக்
கொண்டுவரும் கும்பாரிக் கல்.

சறுகியதும், என்றன் சகநணபர் அப்போ(து)
அருகிருந்து காத்த அறமும் - மறுபடியும் 

கூட்டத்தோ(டு) ஏறிக் கொடியசைத்த பேரழகும்
காட்டிநிற்கும் கும்பாரிக் கல்.

கச்சான் அடித்தாலும் உப்புக் கரித்தாலும்
மச்சான் மடிதள்ளச் சொன்னாலும் - உச்சி
பிடித்துப்போய் வீணாய்ப் பிடிவாதம் செய்த
கடிகையூர்க் கும்பாரிக் கல்.

தெக்குகடல் ஓசையிட, தேன்தமிழின் பாட்டறிந்த
முக்குவர்தம் பாடல் முழக்கமிட - மக்கள்
முடியுமட்டும் கேட்கவைத்த முந்தையர் நெய்தல்
கடிகைநகர் கும்பாரிக் கல்.

நாலைந்து கல்லோடு நல்லுறவாய் நணபனைப்
போலமர்ந்த தோற்றப் பொலிவுகண்டு - சேலளந்த
ஊரவரும் 'கும்பாரிக் கல்'லென்(று) ஒருபெயரைக்
கூறவரும் கொள்ளையெழில் கல்!..